Welcome Message by PMTT
மதிப்பிற்குரிய தமிழாசிரியப் பெருமக்களே,
வணக்கம். சிங்கப்பூர் ஆசிரியர் கலைக்கழகத்தின்கீழ் இயங்குகின்ற தமிழாசிரியர் பணித்திறன் மேம்பாட்டகம் சில முக்கியக் குறிக்கோள்களை அடியொற்றிச் செயற்பட்டுவருகிறது. அவை பின்வருவன:
- பாடத்தைத் தரமிக்க அளவில் எப்படிக் கற்பிப்பது? எப்படி மதிப்பிடுவது? - என்னும் கேள்விகளுக்கு விடை காணும் வகையில் ஆசிரியர்கள் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்வது அவசியம். அத்தேவையைப் பூர்த்திசெய்யும் நோக்கத்தில் தமிழாசிரியர் பணித்திறன் மேம்பாட்டகம் 2010-இல் சிங்கப்பூர்க் கல்வி அமைச்சால் அமைக்கப்பெற்றது. எனவே, நமது பணித்திறன் மேம்பாட்டகம் நடத்தும் பயில்திட்டங்களையும் தயாரித்துவழங்கும் வளமைகளையும் தமிழாசிரியர்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டு தொழில்முறை கற்றலில் (professional learning) தங்களை ஈடுபடுத்திக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
2. நம் ஆசிரியர் வழிநடத்துநர்கள் (Teacher Leaders) பள்ளிநிலையிலும் குழுமநிலையிலும் சிறப்பாகப் பங்காற்றிவருவதை நாம் அறிவோம். சிலர் தேசியநிலையிலும் பங்காற்றிவருவது குறிப்பிடத்தக்கது. தற்போது, ஆசிரியர் வழிநடத்துநர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விருப்பம் நம் அமைச்சுக்கு இருப்பதால், வழங்கப்படும் அரிய தொழில்முறை வாய்ப்புகளைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டிய தேவையும் பொறுப்பும் தமிழாசிரியர்களுக்கு உண்டு.
3. இவ்வாண்டு, நம் பணித்திறன் மேம்பாட்டகம் ஒருங்கிணைந்த சிறப்புத் திட்டங்களை (Integrated Special Projects) அமலாக்கஞ்செய்ய விழைகிறது. ஆசிரியரின் தமிழ் இலக்கண அறிவை ஆழப்படுத்துதல், பையப்பயிலும் மாணவர்களுக்கும் சிறப்புக் கற்றல் தேவைகொண்ட மாணவர்களுக்கும் ஆதரவு வழங்குதல், 21-ஆம் நூற்றாண்டுத் திறன்களை ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் வளர்த்தல், கல்வி அமைச்சின் பாலர் நிலையக் கல்வியாளர்களுக்குரிய வளமைகளைத் தயாரித்தல் முதலிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. அவற்றுக்காக அமைக்கப்பெறும் பணிக்குழுக்களில் தமிழாசிரியர்கள் ஒருசிலர் இணைக்கப்படுவர்.
தமிழாசிரியர்கள் தங்கள் மேம்பாட்டுக்குத் தேவையான தொழில்முறை கற்றலில் தாங்களே பொறுப்பேற்றுப் பயனுற வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பு. அதனை நம் அமைச்சு, ‘ஆசிரியர் பொறுப்பேற்றல், ஆசிரியர் தலைமைத்துவம்’ (Teacher Ownership, Teacher Leadership) என்று வலியுறுத்துகிறது. நாம் ஒவ்வொருவரும் 21-ஆம் நூற்றாண்டில் ஆசிரியர்க்குத் தேவைப்படும் தகுதியினை வளர்த்துக்கொண்டால்தான், நாம் கற்பிக்கும் மாணவர்களுக்கு 21-ஆம் நூற்றாண்டுக்குத் தேவைப்படும் எதிர்காலக் கல்வியை நம்மால் தொலைநோக்குடன் வழங்க முடியும். அதற்குச் சிங்கப்பூர்க் கற்பித்தல் முறைமையும் கல்வியாளருக்கான சிகில்ஸ்ஃபியூச்சர் பயில்திட்டங்களும் பெரிதும் உதவும். ‘வாழ்க்கைக்கான கற்றல்’ (Learn for Life) என்பது மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.
உழவர் ஆழ உழுது, உலகுக்குப் பயன்தரும் பயிரை அறுவடை செய்வது வழக்கம். உழவர் போன்று, தரமிக்க கற்பித்தல்வழிக் கற்றலை ஆழப்படுத்தினால், எதிர்கால உலகத்திற்கும் நாட்டிற்கும் பங்காற்றும் சிறந்த மாணாக்கர்களை நம்மாலும் உருவாக்க முடியும்!
நன்றி.
அன்புடன்,
சுப்பிரமணியம் நடேசன்
தலைமை முதன்மை ஆசிரியர்
தமிழாசிரியர் பணித்திறன் மேம்பாட்டகம்
25 ஜனவரி 2023