Teachers' Resources
ஆசிரியர்க்கான கற்பித்தல் வளமைகள் (Teachers' Resources)
பயன்மிகு கற்பித்தல், அர்த்தமிகு கற்றல் - வழிகாட்டுகோப்பு
இதில், தமிழாசிரியர் பணித்திறன் மேம்பாட்டகம் அடையாளங்கண்ட ஏழு கற்பித்தல் கோட்பாடுகளுக்கான விளக்கங்கள் பாடக்குறிப்புகளுடன் இடம்பெற்றுள்ளன. முதன்மை ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் மூத்த தமிழாசிரியர்கள் எழுவர் கல்வியியல் ஆய்வு நோக்கில் வரைந்துள்ள இவ்வியல்கள் பயன்மிகு வகையில் பாடத்தைத் திட்டமிடுவதற்கும் செயற்படுத்துவதற்கும் உறுதுணைபுரியும்.
எழுத்துப் பணிக்கான கற்பித்தல்
(உயர்நிலை)
எழுத்துப்பணிக்கான அடிப்படை செயல்முறைகளைக் கொண்ட வடிவமாதிரியின் விளக்கமும் அதனை அடியொற்றித் தமிழாசிரியர்கள் சிலர் தயாரித்து வெற்றிகண்ட மாதிரிப் பாடங்களும் இடம்பெற்றுள்ளன.
வாழ்நாள் வாசகரை உருவாக்கும்
அகன்ற படிப்பு (உயர்நிலை)
மாணவர்களிடையே அகன்ற படிப்பினை ஊக்குவிக்கும் வகையிலான கற்பித்தலுக்குரிய வடிவமாதிரியின் விளக்கமும் அது குறித்து உயர்நிலைப்பள்ளி மூத்த தமிழாசிரியர்கள் சிலர் மேற்கொண்ட செயலாய்வுக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.
பயன்மிகு தமிழ்மொழிப் புழக்கத்திற்குப் பேச்சுவழிக் கருத்துப்பரிமாற்றம் (தொடக்கநிலை)
இந்நூலில் பேச்சுவழிக் கருத்துப்பரிமாற்றத் திறன் மேம்பாட்டிற்கான வடிவமாதிரி பற்றிய விளக்கமும் கற்பித்தல் உத்திமுறைகள், மதிப்பீட்டு முறைகள், மாதிரிப் பாடங்கள், பயிற்சி வளங்கள் ஆகியனவும் அடங்கியுள்ளன.
பயன்மிகு தமிழ்மொழிப் புழக்கத்திற்குப் பேச்சுவழிக் கருத்துப்பரிமாற்றம் (உயர்நிலை)
தொகுப்பு நூல்
இத்தொகுப்பில், _பயன்மிகு தமிழ்மொழிப் புழக்கத்திற்குப் பேச்சுவழிக் கருத்துப்பரிமாற்றம் (உயர்நிலை)_ என்னும் அறிமுக நூலும் பேச்சுவழிக் கருத்துப்பரிமாற்றத் திறனைக் கற்பிப்பதற்கான வடிவமாதிரியின் ஏற்புடைமையை உறுதிப்படுத்துவதற்கு உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியர்கள் முதன்மை ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் மேற்கொண்ட செயலாய்வுகள் அடங்கிய நான்கு நூல்களும் உள்ளன.
‘படித்துணர் ; புரிந்துணர்; எழுதிப்பகிர்’
எழுத்துவழிக் கருத்துப்பரிமாற்றத்திறனை வளர்ப்பதற்கான 3 கட்டங்கள் (தொடக்கநிலை)
மாணவர்களின் எழுத்துவழிக் கருத்துப்பரிமாற்றத் திறனை வளர்ப்பதற்கான கற்பித்தல் வடிவமாதிரிபற்றிய விளக்கமும் மூன்று கட்டங்களாக அமைந்துள்ள கற்பித்தலுக்குரிய உத்திமுறைகளின் விளக்கங்களும் பிற வளங்களும் இடம்பெற்றுள்ளன.
விளையாட்டுவழிக் கற்றல்
(தொடக்கநிலை)
இது ஓர் அறிமுக நூலாகும். இது மாணவர்களுக்கு மொழியறிவையும் பண்பாட்டறிவையும் விளையாட்டுவழிக் கற்பிக்கும் வகையில் ஆய்வின் அடிப்படையில் வரையப்பட்டுள்ளது. மாதிரிப் பாடயோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.
படைப்பாக்கத்திற்காகக் கற்பித்தலும் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டிற்காகக் கற்பித்தலும்: பாட ஆய்வு அணுகுமுறை
(தொடக்கப்பள்ளி)
இந்நூலில் படைப்பாக்கத்திறன் வளர்ச்சி, அதற்கான கற்பித்தல் முறைமைகள், பாட ஆய்வு ஆகியவற்றின் விளக்கங்களோடு பாட ஆய்வு அணுகுமுறையிலான பாடங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இவை தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் படைப்பாக்கக் கற்பித்தல் முறைமைகளை ஒருங்கிணைத்துக் கற்பிக்கத் துணைபுரியும்.
கற்றலை உணர்தல் கற்றல் ஆய்வு அணுகுமுறை
இவ்வளமைத் தொகுப்புநூலில் கற்றல் ஆய்வின் அறிமுகமும் அதன் கோட்பாடுகளின்படி தமிழாசிரியர்கள் பாடங்களைத் தயாரித்துக் கற்பித்து வெற்றிகண்ட ஆய்வுப் பாடங்களின் கண்ணோட்டமும் பாடவளங்களும் அச்சுப் பிரதியாகவும் கணினிவட்டுப் பதிவாகவும் இடம்பெற்றுள்ளன.
‘பாடும் தமிழ்’ கற்றல் கற்பித்தல்
- வழிகாட்டு நூல் (தொடக்கநிலை)
இது பாடல்வழித் தமிழ்மொழி கற்றல் கற்பித்தலுக்கான முதல் வழிகாட்டு நூலாகும். இந்நூலோடு மாணவர்களுக்கான 10 சிறுவர் பாடல்களும் வகுப்பறை நடவடிக்கைகளுக்கு ஏற்றவாறு இசைப் பின்னணியோடு பாடப்பட்டு ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஓர் இசைவட்டும் இணைக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் சொல்வளம், தெளிவான உச்சரிப்பு, குரல்வளம், நினைவாற்றல், அறிவு விரிவாக்கம் போன்றவற்றை மேம்படுத்த இவ்வளமைத் தொகுப்புத் துணைபுரியும்.
பாடும் தமிழ் 2’ பாடல்வழித் தமிழ் கற்றலும் கற்பித்தலும்
- வழிகாட்டு நூலும் வளங்களும்
இவ்வழிகாட்டு நூலில் சிங்கப்பூர் வாழ்க்கைச் சூழலைப் பின்னணியாகக்கொண்ட 10 சிறுவர் பாடல்கள் இயற்றப்பட்டு இசைக் கூறுகளோடு இடம்பெற்றுள்ளன. நன்னெறி புகட்டவும் மொழிக்கூறுகளைக் கற்பிக்கவும் உச்சரிப்புப் பயிற்சிக்கும் சொல்வளத்தைப் பெருக்கவும் துணைபுரியும் உதவிக்குறிப்புகள் அடங்கியுள்ளன. ஒலிப்பதிவுகள் கொண்ட தரவு சேமிப்புக் கருவியும் அப்பாடல்களின் ஒளிக்காட்சிப் படைப்பும் துணைக்கருவிகளாக வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்மொழிக் கல்வி: மரபும் பண்பாடும்
பண்பாடு: ஆய்வியலும் கல்வியியலும், மொழிக்கு முகவரி அதன் பண்பாடு, சிங்கப்பூர்த் தாய்மொழிக் கல்விக் கொள்கையிலும் தமிழ்மொழிப் பாடக்கலைத்திட்டத்திலும் பண்பாடு, தமிழாசிரியரின் பண்பாட்டறிவு: ஆழமும் தெளிவும் ஆகிய இயல்களைக் கொண்டு தமிழாசிரியர்களின் பாடப்புலைமைக்கு உதவக்கூடிய வளமையாக இந்நூல் அமைந்துள்ளது.
கல்வியியல் நோக்கில் தமிழ் அறம்
இந்நூலில் தமிழ் அறம் குறித்து அரிய பல கல்வியியல் சிந்தனைகளும் உத்திமுறைகளும் ஆய்வுக் கண்ணோட்டத்தில் வழங்கப்பட்டுள்ளன. தமிழாசிரியர்களும் அவர்கள்மூலம் மாணவர்களும் வெகுவாகப் பயன்பெற வேண்டும் என்னும் நோக்கத்தில் இந்நூல் வரையப்பட்டுள்ளது.
பயன்பாட்டு இலக்கணம் - தொகுப்பு நூல்
தமிழ் இலக்கணத்திலுள்ள அடிப்படைக் கூறுகளைத் தெரிவுசெய்து, நன்கறிந்த தமிழ் இலக்கண நூலாசிரியர்களின் நூல்களைச் சான்றாகக் கொண்டு, பயன்பாட்டு நோக்கில் தமிழாசிரியர்களின் சுய கற்றலுக்காகத் இத்தொகுப்பு நூல் வழங்கப்பட்டுள்ளது.